தமிழகத்தில் எந்த நேரமும் வெடிக்கலாம் - எச்சரிக்கும் எச்.ராஜா

தமிழகம் வெடி மூட்டை மீது உட்கார்ந்து இருக்கிறது எந்த நேரமும் வெடிக்கலாம் என்று எச்சரித்து இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.
மின்கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’தமிழகம் வெடி மூட்டைமீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் வன்முறை வெடிக்கலாம்’’ என்றார்.
அவர் மேலும் அது குறித்து, ’’சின்ன சேலம் அருகே வன்முறையில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் என்கிற நக்சல் அமைப்பு, தந்தை பெரியார் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி விடுதலை சிறுத்தைகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதே போல் தஞ்சாவூரில் உள்ள செட்டியார் தெருவில் அனைத்து நச்சலமைப்புகளும் மாநாடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த மாநாடு நடைபெறக்கூடாது. இந்த விசயத்தில் தமிழக காவல்துறையை நம்பும்படியாக இல்லை.
வன்முறை சம்பவம் பற்றி தகவல் தராத உளவு பிரிவு டேவிட்சன் ஆசீர்வாதத்தை பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னதாக மாஜி டிஜிபி அலெக்சாண்டர் எவ்வளவு பெரிய தேச துரோகி என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டேன் . தடை செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் குருநாதர் பாலசிங்கம் , அவரது மனைவி அடேல் ஆகியோரை டிஜிபியாக இருந்த தேச துரோகி போலியான பாஸ்போர்ட் மூலம் லண்டன் அனுப்பி வைத்தார்.
பின்னாளில் பாலசிங்கத்தின் மனைவி எழுதிய புத்தகத்தில் லண்டன் செல்ல உதவியதற்கு அலெக்சாண்டருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அந்த நகலை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தேன். இதன் மூலம் மத வெறி கொண்டவர்கள் தேச விரோதமாகவும் செயல்படுவார்கள் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது . இது சம்பந்தமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் மனு கொடுத்து இருக்கிறார் . அதன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக டேவிட்சன் ஆசீர்வாதத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.