சீன வீரர்களுடன் நமது வீரர்கள் மோதும் போது சீனர்களுடன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. ராகுலை கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்
ராகுல் ஜி, நமது ராணுவ வீரர்கள் சீன மக்கள் விடுதலை ராணுவ வீரர்களுடன் நேருக்கு நேர் மோதும்போது சீனர்களுடன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று பதில் சொல்லுங்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா போருக்கு தயாராகி வருகிறது ஆனால் மத்திய அரசு அதனை மறுக்கிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில் கூறியதாவது: ராகுல் ஜி, நமது ராணுவ வீரர்கள் சீன மக்கள் விடுதலை ராணுவ வீரர்களுடன் நேருக்கு நேர் மோதும்போது சீனர்களுடன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று பதில் சொல்லுங்கள். ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்? அவர் நமது ராணுவத்தை மட்டுமே கேள்வி கேட்கிறார். ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீன அதிகாரிகளிடம் இருந்து நிதி பெற்றதா?.
பிலாவல் புட்டோவின் அறிக்கையும், பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலும், இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளும், விசாரணைகளும் பயங்கரவாதத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதைக் காட்டுகிறது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களே (பாகிஸ்தான்) அதன் வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும். தீவிரவாதத்திற்கு எதிராக உலகை இந்தியா ஒன்றிணைத்து வரும் நிலையில், நமது அண்டை நாடுகள் சில பயங்கரவாதத்தை ஆதரித்து, அதற்கு ஆதரவாக உரத்த குரலில் பேசுகின்றன. அவர்களின் உண்மை முகம் சர்வதேச அளவில் வெளிப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை அழிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மோடி அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை பயங்கரவாதத்தை சகிப்புத்தன்மையற்றது. தீர்க்கமான நடவடிக்கை எங்களுக்கு உறுதியான முடிவுகளை தந்துள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் ஆகியவற்றை பார்த்தால், 2014 முதல் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் 168 சதவீதம் குறைந்துள்ளது. சமூக நலன் என்ற சாக்குபோக்கில் தீவிரமயமாக்கலை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை (பி.எஃப்.ஐ.) தடை செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தயங்கவில்லை. அந்த அமைப்புக்கு எதிராக தீவிர விசாரணை நடத்தி அதன் உறுப்பினர்களை கைது செய்தோம். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.