ராகுல் காந்திக்கும், காங்கிரஸூக்கும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை... அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு
ராகுல் காந்திக்கும், காங்கிரஸூக்கும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டது. 20 வீரர்களை கொன்றுள்ளது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீன படையினரால் நமது வீரர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல். எல்லையில் சீனா மேற்கொள்வது ஆக்கிரமிரப்பு முயற்சியல்ல. அது போருக்கான முன்னேற்பாடு, அவர்கள் அங்கு குவிக்கும் ஆயுதங்களை பார்த்தால் அதனை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
சீனா போருக்கு தயாராகி வருகிறது ஆனால் மத்திய அரசு தூங்கி வருகிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோதும், ராகுல் காந்தி எங்களிடம் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்திக்கும், காங்கிரஸூக்கும் நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது 1962ன் இந்தியா அல்ல, இது 2014ன் இந்தியா. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், அவர்களால் நமது ராணுவத்துக்கு போர் விமானங்கள், ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அல்லது பனி பூட்ஸ் போன்றவற்றை வாங்க முடியவில்லை. நம் ராணுவத்துக்கு நீங்கள் (காங்கிரஸ்) என்ன செய்தீர்கள்?. இன்று இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட ராணுவ பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இப்போது பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியாளராக உள்ளது. இனி இறக்குமதியாளராக இல்லை. இதுதான் தற்சார்பு இந்தியா. டோக்லாம் சம்பவத்தின் போது கூட, பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நமது ராணுவத்தை சென்று சந்தித்தனர்.