பொய்யான வாக்குறுதிகள் பலிக்காது என்று கெஜ்ரிவாலுக்கு மக்கள் தெளிவான செய்தியை கொடுக்க விருப்பம்... அனுராக் தாக்கூர்

 
அனுராக் தாக்கூர்

பொய்யான வாக்குறுதிகள் பலிக்காது என்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெளிவான செய்தியை கொடுக்க விரும்புகிறார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி இடையிலான இரு முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மாநகராட்சியில் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது.

ஆம் ஆத்மி

அதேசமயம், யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, எதிர்வரும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் நேற்று  டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்  பிரச்சாரம் செய்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஆம் ஆத்மி அமைச்சர்கள் அனைவரும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களில் மட்டும் சிக்கவில்லை, சிறையிலும் அடைக்கப்பட்டனர். இது ஊழல், மதுபானம் மற்றும் மோசடிகளில் மட்டுமே  அவரது (ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்) அரசியல் உள்ளது என்பதை காட்டுகிறது. பொய்யான வாக்குறுதிகள் பலிக்காது என்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெளிவான செய்தியை கொடுக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.