குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது... அனுராக் தாக்கூர்
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் இளம் தலைவர்களில் ஒருவருமான அனுராக் தாக்கூர் கூறியதாவது: எதிர்வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்யும். நான் நம்பிக்கையுடன் இருப்பதால் நான் சொன்னதை எழுத்துப்பூர்வமாக கொடுக்க முடியும்.
இமாச்சல பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரேம் குமார் துமால் நீண்ட காலமாக மாநிலத்திற்காக உழைத்து வருகிறார். மேலும் ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டர்களும் அவரை போற்றுகிறார்கள். இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கூட்டு முயற்சியுடன் பா.ஜ.க. வெற்றி பெறும். தன்தேராஸ் விழாவில், 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இது ஒரு பெரிய பரிசு.
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, அதன் (டெல்லி) கல்வி அமைச்சர் (மணிஷ் சிசோடியா) ஊழலில் ஈடுபட்டுள்ளார். மேலும் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதியன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்த இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.