அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது- அண்ணாமலை
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையிடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 1000 பேர் கலந்துக்கொண்டு யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் 7000 இடங்களில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெறுவது பெருமையளிக்கிறது.மேலும் சிறந்த யோகா ஆசிரியர்களுக்கு தங்கத்தாமரை விருது வழங்கப்பட்டது. தற்போது நடப்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நடைபெறுவது உட்கட்சி விவகாரம், அதில் எக்காரணம் கொண்டும் பாரதிய ஜனதா கட்சி தலையிடாது. மாமல்லபுத்தில் நடைபெறகூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் பாரத பிரதமர் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை” என தெரிவித்தார்.