ஊழல், விளம்பரம்! இதுவே திமுக அரசின் ஓராண்டு சாதனை - அண்ணாமலை
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் ஒன்றிய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “8 ஆண்டு சாதனை பொது கூட்டத்தை குளித்தலையில் கூட்ட வேண்டும் என்பது தனது விருப்பம். பெரிய நகரங்களில் கூட்டம் கூட்டுவதை விட சிறிய நகரங்களில் கூட்டம் கூட்டினால் 8 ஆண்டு சாதனைகளை பொது மக்களிடம் கொண்டு செல்ல முடியும். குளித்தலை தொகுதி சிறப்பு வாய்ந்த தொகுதி. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டபேரவைக்கு செல்ல உதவியது இந்த தொகுதிதான். அவரது பிறந்த நாளில் பாஜக 8 ஆண்டு சாதனை கூட்டத்தை குளித்தலையில் நடத்துகிறோம். திமுக குடும்ப கட்சியாகவும், குடும்பத்தை வளர்க்கும் கட்சியாகவும் உள்ளது.
குளித்தலை தொகுதி இதுவரை பின்தங்கிய தொகுதியாக உள்ளது. இதுவரை பேருந்து நிலையம் இல்லை, மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படையவில்லை. குளித்தலை தொகுதியில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என கேட்டதற்கு இன்னும் 4 வருடம் இருப்பதாக கூறினார். ஒன்றிய பாஜக அரசு 45 கோடி மக்களுக்கு முதல் முறையாக ஜன் தன் வங்கி கணக்கு மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு தொழிலாளிகள், கேஸ் மானியம் என 22 லட்சம் கோடி பணம் செலுத்தபட்டுள்ளது. பாரத பிரதமரின் பிரசாந்த் கிஷான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் 6000 பணம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 8 கோடி கழிப்பறைகளை கட்டிதந்துள்ளார். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி தந்துள்ளார்.
திமுக அரசு ஓராண்டு சாதனைகளில் லஞ்சம் அதிகரித்துள்ளது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு காவல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள் கட்ட பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தாய் தந்தையை இழந்த 6000 குழந்தைகளுக்கு 18 - 23 வயது வரை மாதந்தோறும் 4000 பணம் வழங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அந்த குழந்தைகளுக்கு 23 வயதில் அவர்களுக்கு வழங்க கூடிய 10 லட்சம் ரூபாய்க்கான தொகைக்கு முன்கூட்டியே தேதி குறிப்பிட்ட காசோலையை நேற்று முன்தினம் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்கிறது.
குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது 14 வருடங்களுக்கு முன் தொடங்கிய 6 திட்டங்கள் முழுமை அடைந்துள்ளன. தமிழகத்தில் மாநில அரசின் எந்த ஒரு திட்டமானது 100% அடைந்து நிறைவு பெற்றுள்ளதா? திமுக அரசு அனைத்திலும் ஊழல் செய்து, விளம்பரம் செய்து வருவது தான் திமுகவின் ஓராண்டு சாதனை. ஓராண்டுக்குள் அனைத்து துறைகளிலும் ஊழல், மின்சார தடைக்கு அணில் காரணம் என்று கூறியது, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருட்களில் ஊழல். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தீவிரவாதம் குறைந்துள்ளது.” எனக் கூறினார்.