"காம்ரேட்கள் கூட இத கண்டுக்கலயே" - அரசு மீது அண்ணாமலை அதிருப்தி!
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழிலே பிரதானம். பல்லாயிரக்கணக்கானோர் அதை நம்பி இருக்கிறார்கள். பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து அதனை நூலாக்கி அதனை விசைத்தறியாளர்களுக்கு மூலப்பொருளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்கின்றனர். அந்த நூலை துணியாக மாற்றி தருவது விசைத்தறியாளர்களின் பணி. இதற்கான கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர். இக்கூலியிலிருந்து தான் விசைத்தறி உரிமையாளர்கள் அனைத்து செலவுகளையும் செய்கிறார்கள். அனைத்தும் போக மிஞ்சுவது தான் அவர்களின் வருமானம்.
விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கூலி உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாகவே கூலி உயர்த்தப்படவில்லை. இது விசைத்தறி உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த போராட்டத்தில் குதித்தனர். இதற்குப் பின்னர் அரசு சார்பில் இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி கூலி உயர்த்தி வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வந்தனர். ஆனால் அதனை அமல்படுத்தவில்லை. இதையடுத்து பல்லடம், சோமனுார், அவிநாசி, தெக்கலுார், மங்கலம் உள்ளிட்ட 9 விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்லடம், சோமனூர், அவிநாசி, புதுப்பாளையம், மங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 லட்சம் விசைத்தறிகள் முடங்கி கிடக்கின்றன. இங்கே உழைத்துக் கொண்டிருந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வாடிக் கிடக்கிறார்கள். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும் 3 ஆயிரம் கைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் ரூ.200 கோடிக்கான மூலப்பொருட்கள் முடங்கி கிடக்கின்றன.
ஜனவரி 9-ம் தேதியில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு காரணம் ஆளும் கட்சியின் மெத்தனப் போக்கு. திமுகவின் தொழிலாளர் விரோதப் போக்கை கூட்டணியில் உள்ளகம்யூனிஸ்டுகளும் கூட கண்டுகொள்ளவில்லை. கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசு இனியும் காலம் கடத்தாமல தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மூடிக்கிடக்கும் விசைத்தறிகளை உடனடியாகஇயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.