காங்கிரஸ் கட்சிக்குள் ராவணன் ஒளிந்திருப்பது தெரிகிறது... அதன் தாக்கம் அந்த கட்சியில் அவ்வப்போது தென்படுகிறது.. பா.ஜ.க.

 
அனில் விஜ்

மோடிக்கு 100 தலைகள் உள்ளதா என்று கார்கே விமர்சனம் செய்ததை  குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சிக்குள் ராவணன்  ஒளிந்திருப்பது தெரிகிறது. அதனால்தான் ராவணன் பாதிப்புகள் கட்சியில் அவ்வப்போது தென்படுகிறது என்று ஹரியானா அமைச்சர் அணில் விஜ் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், மோடி ஜி பிரதமர். அவர் தனது வேலையை மறந்து மாநகராட்சி தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் மற்றும் எம்.பி. தேர்தல் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறார். எந்நேரமும் தன்னை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம், மோடியை பார்த்து ஒட்டு போடுங்கள் என்று சொல்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்க்கிறோம்? உங்களிடம் எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனை போல 100 தலைகள் உள்ளதா? என தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே

மோடிக்கு 100 தலைகள் உள்ளதா என்று  காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம் செய்ததற்கு, பா.ஜ.க. அமைச்சர் அனில் விஜ் பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானா உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் விஜ் டிவிட்டரில், பகவான் ஸ்ரீ ராமர் பல ஆண்டுகளுக்கு முன்பே ராவணனைக் கொன்றார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் கூற்றுப்படி, காங்கிரஸ் கட்சிக்குள் ராவணன்  ஒளிந்திருப்பது தெரிகிறது. அதனால்தான் ராவணன் பாதிப்புகள் கட்சியில் அவ்வப்போது தென்படுகிறது.

மோடி

கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மல்லிகார்ஜூன் கார்கே பேசிய வீடியோவை ஷேர் செய்து, குஜராத் தேர்தல் சூட்டை தாங்க முடியாமல், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என்று அழைக்கிறார்.  மரண வியாபாரி முதல் ராவணன் வரை,   குஜராத்தையும் மற்றும் அதன் மகனையும் (மோடி) காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. என பதிவு செய்து இருந்தார்.