2 கலாச்சாரத்தில் வளர்ந்தவர் அவருடைய சிந்தனையில் எப்போதும் முரண்பாடு.. ராகுலை தாக்கிய பா.ஜ.க

 
ராகுல் காந்தி

ராகுல் காந்தி இத்தாலி மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தில் வளர்ந்தார். அவருடைய சிந்தனையில் எப்போதும் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது என்று ஹரியானா பா.ஜ.க. அமைச்சர் அனில் விஜ் விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டின் செல்வத்தில் 40 சதவீதம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் சென்று விட்டது, 84 சதவீத மக்கள் வறுமையின் விளிம்பில் உள்ளனர். இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இரு இந்தியாவையும் ஒன்றாக கொண்டு வருவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்க வேண்டும். இந்தியாவில் இரண்டு போட்டி பார்வைகள் உள்ளன.

பா.ஜ.க.

ஒன்று, மாநிலங்களின் ஒன்றியம், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுகள் எடுக்கப்படும்- சமமானவர்களின் கூட்டு. மற்றொன்று, ஷஹேன்ஷாவின் கட்டளைப்படி ஆட்சி. இது 3 ஆயிரம் ஆண்டுகளாக வேலை செய்யவில்லை. பா.ஜ.க.வின் தவறான பார்வை நமது தேசத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இரு இந்தியா கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. 

அனில் விஜ்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஹரியானா உள்துறை அமைச்சருமான அனில் விஜ் இது தொடர்பாக டிவிட்டரில், ராகுல் காந்தி இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்ததால் ஒரே இந்தியாவில் இரு இந்தியாவை பார்ப்பது இயற்கையானது. தாய் சோனியா காந்தி இத்தாலியர் மற்றும் தந்தை ராஜீவ் காந்தி இந்தியாவை சேர்ந்தவர். அவர் இத்தாலி மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தில் வளர்ந்தார். அவருடைய சிந்தனையில் எப்போதும் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.