நிதிஷ் குமார் ஒரு புலம்பெயர்ந்த பறவை, கிளை தாவுவது அவரது இயல்பு... பா.ஜ.க. அமைச்சர் தாக்கு

 
கோட்டாவிலிருந்து பீகார் மாணவர்களை அழைத்து வாங்க… இல்லைன்னா 5 லட்சம் ஓட்டு கிடைக்காது.. நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க. அட்வைஸ்..

நிதிஷ் குமார் ஒரு புலம்பெயர்ந்த பறவை. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவுவது  (கூட்டணி மாற்றுவது)  அவரது இயல்பு என்று நிதிஷ் குமாரை ஹரியானா பா.ஜ.க. அமைச்சர் அனில் விஜ் விமர்சனம் செய்தார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறியதோடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். உடனே ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்தார். அடுத்த சில மணி நேரங்களில் மெகா கூட்டணியின் 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அழைக்க அழைக்கும்படி நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நேற்று 8வது முறையாக நிதிஷ் குமார் பீகாரின் முதல்வராக பொறுப்பேற்றார்.

அனில் விஜ்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி மெகா கூட்டணி இணைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பா.ஜ.க.வினர் கடுமையாக தாக்கினர். ஹரியானா உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் விஜ் டிவிட்டரில், நிதிஷ் குமார் ஒரு புலம்பெயர்ந்த பறவை. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவுவது  (கூட்டணி மாற்றுவது)  அவரது இயல்பு. தவறுதலாக சில பறவைகள் ஒரு கிளையில் கூடி விட்டன. யார், எப்போது, எங்கு பறப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இது ஒரு சில நாட்களின் விஷயம் என பதிவு செய்து இருந்தார்.

தர்கிஷோர் பிரசாத்

பீகார் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான தர்கிஷோர் பிரசாத் கூறுகையில், 2017ல் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சிப்பதாக நிதிஷ் குமார் கூறினார். நேற்று (நேற்று முன்தினம்) பா.ஜ.க. தனது கட்சியை உடைக்க முயற்சிப்பதாக கூறினார். பா.ஜ.க.வில் இருந்து பிரிந்த அவரது முடிவு நன்கு யோசித்து  எடுக்கப்பட்டது. ஒரு தலைவர் தனது சொந்த லட்சியத்தின்படி செயல்பட்டால், பீகார் தகுந்த பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.