செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அதிகாரி- அமைச்சர் நேருவுக்கு வந்த கோபம்

ஆய்வுக் கூட்டத்தில் நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது இப்படி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தால் எப்படி சொல்லும் அறிவுரையை கேட்க முடியும் என்று அமைச்சர் கடிந்து கொள்ள, அந்த அதிகாரி தன் தவறை உணர்ந்து செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்கார்ந்து இருக்கிறார்.
நாமக்கல் நகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன், ராஜேஷ்குமார் எம்.பி., மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகராட்சியின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் நேரு அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டு வந்தார். அப்போது ஒரு அதிகாரி கீழே குனிந்து செல்போனையே பார்த்துக்கொண்டு இருந்தார். இதைக் கவனித்து கடுப்பான அமைச்சர் நேரு, அந்த அதிகாரியை பார்த்து சத்தம் போடவும், பதறிப்போன அவர் எழுந்து நிற்கவும், ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறால் சொல்லும் அறிவுரைகளை எப்படி கேட்க முடியும்? செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன? என்று கோபமாக கேட்கவும், உடனே தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விட்டு ஆய்வுக் கூட்டத்தை கவனிக்க தொடங்கியிருக்கிறார்.
ஆவேசமாக இருந்த அமைச்சர் அதன் பின்னர் அமைதியாகி மேற்கொண்டு கூட்டத்தில் பேசியிருக்கிறார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது .