"பாமக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறிவிடும்; நாங்க பாட்டாளி மாடல்"

 
anbumani

சேலம் உருக்காலைக்காக  விவசாயிகள் குறைந்த விலையில் நிலம் வழங்கி உள்ளனர்,  எனவே இரும்பாலையை ஒன்றிய அரசு  தனியாருக்கு தாரைவார்த்தால்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிலத்தை திருப்பி தர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் - தமிழ் விக்கிப்பீடியா


சேலம் தெற்கு மாவட்டம் மற்றும் சேலம்  மேற்கு மாவட்டம்  பாமக  சார்பில் ஓமலூர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய  அன்புமணி ராமதாஸ்,  “வன்னியர் சங்கம் ஆரம்பித்த  காலத்தில் சேலம் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று டாக்டர் ராமதாஸ் எழுச்சியை ஏற்படுத்தினார். இப்போது அதே அளவிற்கு மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில்  இரண்டு  சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  அடுத்த தேர்தலில் 11 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெற வேண்டும். அதற்கு என்னுடைய தம்பிகளும் தங்கைகளும் உதவி செய்வார்கள். இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத அளவிற்கு கோடிக்கணக்கான தங்கைகளும் தம்பிகளும் எனக்கு மட்டுமே உள்ளனர். அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும்.  நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக இல்லை. 35 வயதில் மத்திய அமைச்சராகி எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும். ஐந்து  ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும். தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும்.
 
தமிழ்நாட்டில் 55 ஆண்டுகளாக  திமுக, அதிமுக மட்டுமே மாறி மாறி  ஆட்சி நடத்தி  வருகிறது. அடுத்து பாமக ஆட்சிக்கு வரும்.   அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நிஜமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வோம்.  இது பாமக 2.0 என்றார். கட்சிக்கு மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. 2026 நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் என திமுக சொல்கிறது. நான் சொல்வது பாட்டாளி மாடல். எல்லோருக்கும் முறையான கல்வி கொடுப்போம். ஒரு சொட்டு சாராயம் இருக்காது. விவசாயிகள் அவர்களுடைய விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பார்கள். மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் கடவுளை வைத்தும், தமிழை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். ஆனால் பாமக மட்டுமே வளர்ச்சியை முன்வைத்து அரசியல் செய்கிறது.
 
இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ், சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்தது பாமக தான். மேட்டூர் அணை உபரிநீரை சேலத்திற்கு திருப்பி விடச் சொல்லி, டாக்டர் ராமதாஸ் தலைமையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினார்கள். சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீர் திட்டத்தின் கீழ் ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் ,  மொத்தம் 96 ஏரிகளில் 90 ஏரிகள் எடப்பாடி தொகுதியில் தான் உள்ளது. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் 2 ஆண்டுகளில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை முழுமையாக  நிறைவேற்றுவேன்.
 
சேலம் மாவட்டத்தில், ஓமலூர் சரபங்கா நதி,  சேலம் திருமணி முத்தாறு ,  ஆத்தூர் வசிஷ்ட நதிகள் சாக்கடையாக இருப்பதை மீட்டு மீண்டும்  நதிநீர்  ஓடச் செய்வோம். நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்குள் இருக்கும் படி செய்வோம்.  ஆசை இருக்கிறது. ஆனால் அதிகாரம் இல்லை.
நமக்கு வேண்டியது  20 விழுக்காடு. ஆனால், 10.5 விழுக்காடு தான் கிடைத்தது. ஆனால் அதையும் தடுத்து விட்டார்கள். மீண்டும் நிச்சயம் நமக்கான இடஒதுக்கீட்டு பெறுவோம். கிடைக்காவிட்டால் என்னுடைய தம்பிகள் விட மாட்டார்கள். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசும்போது, 45 நிமிடம் முழுமையாக விளக்கி சொல்லியுள்ளோம்.  வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. எனவே நிச்சயம் கிடைக்கும்.
 
மதுவை ஒழிப்பதற்காக போராடி வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் மது அருந்தும் நிலை உள்ளது. கல்லூரி மாணவர்களும் போதைக்கு அடிமையாக உள்ளனர். நாம் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது. அரசின் வருமானத்திற்காக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது” எனக் கூறினார்.