நான் பா.ஜ.க.வில் இணைய போவதாக வெளியான செய்தி அரசியல் குறும்பு.. ஆனந்த் சர்மா விளக்கம்

 
ஆனந்த் சர்மா

நான் பா.ஜ.க.வில் இணைய போவதாக வெளியான செய்தி அரசியல் குறும்பு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா விளக்கம் அளித்தார்.

15 மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அந்த இடங்களுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 57 இடங்களில் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ப சிதம்பரம்

அதேசமயம், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கட்சியலிருந்து வெளியேறி, சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் ஆனந்த் சர்மா காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியானது.

கபில் சிபல்

ஆனால் இந்த தகவலை ஆனந்த் சர்மா மறுத்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் சர்மா கூறுகையில், நான் பா.ஜ.க.வில் இணைய போவதாக வெளியான செய்தி அரசியல் குறும்பு என தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் அவசியம் என்றும், கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் ஆகியோரும் அடங்குவர்.