குஜராத்தை போல கர்நாடகாவிலும் பா.ஜ.க. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும்.. அமித் ஷா வேண்டுகோள்

 
அமித் ஷா

குஜராத்தை போல கர்நாடகாவில் பா.ஜ.க. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய நான் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பூத் தலைவர்கள் மற்றும் பூத் அளவிலான முகவர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: தேர்தலில் மும்முனைப் போட்டி என்று தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று நான் இன்று கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது (எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்) இருமுனைப் போட்டி. நாங்கள் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கப்போவதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதாக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் பொய்களை பரப்பி வருகிறது. 

பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் அதிகாரம் ஊழலுக்கான கருவி, ஆனால் பா.ஜ.க.வின் அதிகாரம் செழிப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி. நமது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஸ்ரீ எடியூரப்பா ஜி மற்றும் பசவராஜ் ஜி ஆகியோர் கர்நாடகாவில் நல்லாட்சியை வழங்கியுள்ளனர். குஜராத்தை போல கர்நாடகாவில் பா.ஜ.க. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய நான் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். நாட்டிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடைசெய்தவர் மோடிஜி தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஆண்டு மே மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதச் சார்ப்பற்ற ஜனதா தளம் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.