காங்கிரஸ் ராஜாக்கள், ராணிகளின் கட்சி.. காங்கிரஸ் தலைவர்கள் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.. அமித் ஷா
காங்கிரஸ் ராஜாக்கள் மற்றும் ராணிக்களின் கட்சி, நாடு முழுவதில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிணடல் செய்தார்.
இமாச்சல பிரதேசத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் நடவுன் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பா.ஜ.க. வேட்பாளர் விஜய் அக்னிஹோத்ரியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அமித் ஷா கூறியதாவது: வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரஸூக்கு எதுவும் சொல்ல முடியாது. இமாச்சல பிரதேசத்தில் சில இடங்களை வெல்வதற்காக எட்டு முதல் 10 இடங்களில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்தது. இங்கும் ஒருவர் (அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்) முதல்வர் ஆசையில் உள்ளார். ஆனால் காங்கிரஸில் முதல்வராக நாம் வரமாட்டோம் என்பது அவருக்கு தெரியாது, யாரோ ஒருவரின் மகனோ அல்லது மகளோ முதல்வராக இருக்க வேண்டும், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு வராது.
இது (காங்கிரஸ்) ராஜாக்கள் மற்றும் ராணிகளின் கட்சி. யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது, ஜனநாயகத்தில் ராஜா-ராணிகளுக்கு இடம் இருக்கிறதா?. மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்து, எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும், உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் ஒருவரை இங்கு கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். இமாச்சல பிரதேச இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்தார்கள், அதன் எல்லைகளை பாதுகாத்துள்ளனர் மற்றும் அவர்களின் உயர்ந்த தியாகங்களை வழங்கியுள்ளனர். முதல் பரம்வீர் சக்ரா இமாச்சலி சோம்நாத் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளாக ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்று ராணுவ வீரர்கள் கோரி வந்தனர் ஆனால் காது கேளாத காங்கிரஸ் அவர்களின் குரலை கேட்கவில்லை.
2014ல் மோடி ஆட்சிக்கு வந்து 2015ல் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினார். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை ஏன் வழங்க முடியவில்லை என்று காங்கிரஸிடம் மக்கள் பதில் கேட்க வேண்டும். காங்கிரஸ் தனது திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதில் தோல்வியடைந்தது. மோடியின் ஆட்சியில் ராமர் கோயில் மட்டுமின்றி, பல கோயில்களும், வழிபாட்டுத் தலங்களும் புனரமைக்கப்பட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இமாச்சல பிரதேசத்தை அடுத்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நாடு முழுவதும் போதைப்பொருள் வணிகத்தை வேரோடு அகற்றுவோம் என்றும் நான் மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.