ராகுல் பாப்பா தனது இத்தாலிய கண்ணாடியை கழற்றி விட்டு மோடியின் வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும்.. அமித் ஷா

 
அமித் ஷா

ராகுல் பாபா (பாப்பா) தனது இத்தாலிய கண்ணாடியை கழற்றி விட்டு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பெமா காண்டுவின் வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமையன்று 2 நாள் பயணமாக அருணாசல பிரதேசம் சென்றார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார். அமித் ஷா நேற்று அருணாசல பிரதேசத்தின் நம்சாய் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: எட்டு ஆண்டுகளில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்கிறார்கள், இந்த மக்கள் (காங்கிரஸார்) கண்களை மூடிக் கொண்டு விழித்திருக்கிறார்கள்.

ராகுல் காந்தி

ராகுல் பாபா (பாப்பா) தனது இத்தாலிய கண்ணாடியை கழற்ற வேண்டும், மேலும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பெமா காண்டுவின் வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும். அருணாசல பிரதேசத்தின் சுற்றுலாவை அதிகரிக்கவும், சட்டம் ஒழுங்கை பலப்படுத்தவும், உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், அருணாசல பிரதேசத்தை மேம்படுத்தவும், பிரதமர் மோடியும், முதல்வர் காண்டுவும் எட்டு ஆண்டுகளில் செய்த பணிகள், 50 ஆண்டுகளில் செய்யப்படவில்லை. இன்று ஒரே நாளில் அருணாசல பிரதேசத்தில் ரூ.786 கோடியில் வளர்ச்சி பணிகள் முடிவடைகின்றன அல்லது தொடங்குகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

கடந்த சனிக்கிழமையன்று ராமகிருஷ்ணா மிஷனின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், வடகிழக்கு இளைஞர்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றி வருகின்றனர். 2014-2022ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி வடகிழக்கு மற்றும் டெல்லி இடையிலான வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்தார். வடகிழக்கு மொழிகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை ஆனால் பிரதமர் மோடி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். போடோலாந்து பிரச்சினை தீர்க்கப்பட்டது. அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் இடையே 60 சதவீத எல்லை தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. எட்டு மாநிலங்களையும் மேம்படுத்துவதே இதன் நோக்கம் என  தெரிவித்தார்.