குஜராத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தால் இவர்தான் முதல்வர்.. அமித் ஷா அறிவிப்பு

 
அமித் ஷா

எதிர்வரும் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றால், தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று அமித் ஷா தெரிவித்தார்.

குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. மேலிடம்  குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானியை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முதல் முறை எம்.எல்.ஏ.வான பூபேந்திர படேலை முதல்வராக்கியது. 2022 குஜராத் தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க. இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பா.ஜ.க.

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 2 கட்டங்களாக (டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி) நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

பூபேந்திர படேல்

இந்நிலையில் எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தால் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாருக்கும்   என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா  பேட்டி ஒன்றில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றால், அடுத்த முதல்வராக  பூபேந்திர படேல் பதவியேற்பார் என தெரிவித்தார்.