காங்கிரஸால் திருப்திப்படுத்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்ய முடியும்... அமித் ஷா குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

காங்கிரஸால் திருப்திப்படுத்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்ய முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக்  கெலாட்டின் கோட்டையாக ஜோத்பூர் கருதப்படுகிறது. அந்நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் தாக்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அந்நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:

அமித் ஷா

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ளார், அவர் முதலில் வரலாற்றை படிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் வளர்ச்சி பணிகளை செய்ய முடியாது. காங்கிரஸ் அரசால் சாலைகள் அமைக்க முடியாது, மின்சாரம் வழங்க முடியாது,  வேலைவாய்ப்பு வழங்க முடியாது. காங்கிரஸால் திருப்திப்படுத்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான  இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.