ராஜஸ்தானில் முதலீடு செய்ய அதானிக்கு அசோக் கெலாட் அழைப்பு.. காந்திகளுக்கு எதிரான கிளர்ச்சியின் அடையாளம்-பா.ஜ.க.

 
கவுதம் அதானி, அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் கவுதம் அதானி பங்கேற்றதை குறிப்பிட்டு, காந்திகளுக்கு எதிரான கிளர்ச்சியின் அடையாளம் என பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இன்வென்ஸ்ட் ராஜஸ்தான் உச்சிமாநாட்டில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பங்கேற்றார். மேலும், அந்த மாநாட்டில் கவுதம் அதானி பேசுகையில்   காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், கவுதம் அதானியை புகழந்து பேசினார்.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

குஜராத் பெரிய தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளது, இப்போது திருபாய் அம்பானி மற்றும் கவுதம் பாய் போன்ற சிறந்த தொழிலதிபர்களையும் உருவாக்கியுள்ளது என்று அசோக் கெலாட் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானியை அடிக்கடி விமர்சித்து வரும் வேளையில், ராஜஸ்தானில் கவுதம் அதானி முதலீடு செய்ய இருப்பது மற்றும் அசோக் கெலாட் கவுதம் அதானியை பாராட்டி பேசியதை குறிப்பிட்டு காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

அமித் மால்வியா
பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், காந்திகளுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் அதிருப்தியின் மற்றொரு அடையாளமாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கவுதம் அதானியை முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைக்கிறார். அவருக்கு (கவுதம் அதானி) முதல்வரின் அருகில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அதானி-அம்பானியை குறை சொல்ல சலிக்காத ராகுல் காந்திக்கு இது ஒரு வெளிப்படையான செய்தி, பின் வாங்க என பதிவு செய்துள்ளார். ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா டிவிட்டரில்,  எதிராளி இன்று நண்பன். பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டுள்ளனர் என பதிவு செய்துள்ளார்.