மம்தா பானர்ஜியின் கவனம் பா.ஜ.க. மீது உள்ளது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அல்ல... அமித் மால்வியா

 
மம்தா

மம்தா பானர்ஜியின் கவனம் பா.ஜ.க. மீது உள்ளது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அல்ல என அமித் மால்வியா குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹவுராவுக்கு செல்ல உள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து ஆதிகாரி அறிவித்தார். ஆனால், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ளதால் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என சுவேந்து ஆதிகாரியை போலீசார் கேட்டுக் கொண்டனர். சுவேந்து ஆதிகாரியின் ஹவுரா பயணத்துக்கு மம்தா பானர்ஜி அரசு முட்டுக்கட்டை போட்டதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமித் மால்வியா

பா.ஜ.க.வின் அமித் மால்வியா கூறியதாவது: மம்தா பானர்ஜியின் கவனம் பா.ஜ.க. மீது உள்ளது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அல்ல. மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் காவலில் வைக்கப்பட்ட பிறகு, தற்போது பா.ஜ.க. அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்ட ஹவுராவுக்கு மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து ஆதிகாரியால் அங்கு செல்ல முடியாது என்பதை மம்தா பானர்ஜி உறுதிப்படுத்தி கொண்டிருக்கிறார். 

சுவேந்து ஆதிகாரி

மம்தா பானர்ஜியின் முழு கவனமும் எதிர்க்கட்சி மீது உள்ளது. கறவை மாடுகள் மீது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்பு முஸ்லிம்களை பால் கறக்கும் பசுக்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டுதான் கறவை மாடுகள் மீது மம்தா பானர்ஜிக்கு கவனம் இல்லை என அமித் மால்வியா குறிப்பிட்டு இருந்தார்.