காந்திகளும், காங்கிரஸூம் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டின் உயரிய விருதுகளை விற்பனை செய்பவர்கள்.. பா.ஜ.க.

 
ரானா கபூர்

பிரியங்கா காந்தியிடம் இருந்து ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என்ற ரானா கபூரின் வாக்குமூலத்தை  மேற்கோள் காட்டி, காந்திகளும், காங்கிரஸூம் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டின் உயரிய விருதுகளை விற்பனை செய்பவர்கள் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் இணை நிறுவனரும், அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ரானா கபூர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், பண மோசடி வழக்கில் ரானா கபூர் உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிக்கையின்படி ரானா கபூர் அமலாக்கத்துறையிடம் கூறியிருப்பதாவது: பிரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான எம்.எப். ஹுசைன் ஒவியத்தை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்ககாக பயன்படுத்தப்பட்டது.

காங்கிரஸ்

முதலில் இது ஒரு கட்டாய விற்பனை என்று நான் கூற விரும்புகிறேன். அதற்கு நான் ஒரு போதும் தயாராக இல்லை. ஓவியத்தை வாங்க மறுப்பது காந்தி குடும்பத்துடன் உறவை வளர்த்து கொள்வதை தடுப்பது மட்டுமின்றி பத்ம பூஷன் விருது பெறம் வாய்ப்பையும் கெடுத்து விடும் என அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா என்னிடம் கூறினார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியிடம் இருந்து ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என்ற ரானா கபூரின் வாக்குமூலத்தை வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அமித் மால்வியா

பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், காந்திகளும், காங்கிரஸூம் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டின் உயரிய சிவிலியன் மரியாதையை (விருது) அதிக விலைக்கு ஏலம் எடுத்தவர் அல்லது தர்பாரிகளுக்கு விற்று வருகின்றனர் என்பது ரானா கபூர் அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. விசுவாசம் அல்லது அமைதியை வாங்க இது ஒரு கருவியாக இருந்தது என பதிவு செய்துள்ளார்.