கெஜ்ரிவால், பகவந்த் மானை அடுத்தடுத்த நாட்களில் சந்திரசேகர் ராவ் சந்தித்தது தற்செயல் நிகழ்வாக இருக்காது.. அமித் மால்வியா

 
பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானையும் அடுத்தடுத்த நாட்களில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்தது தற்செயல் நிகழ்வாக இருக்காது என்று பா.ஜ.க.வின் அமித் மால்வியா தெரிவித்தார்.

கடந்த மே 22ம் தேதியன்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்தார். மேலும் கே.சந்திரசேகர் ராவ் டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்டார். அதற்கு அடுத்த நாள் (மே 23) பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மானை சண்டிகரில் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பை குறிப்பிட்டு, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மகள் கவிதாவுடன்  பா.ஜ.க. தொடர்புப்படுத்தியுள்ளது.

கே.சந்திரசேகர் ராவ்

அமித் மால்வியா டிவிட்டரில், கே.கவிதாவின் தந்தை கே.சந்திரசேகர் ராவ் சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இப்போது மதுபான வியாபாரிகளுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சிசோடியாவுக்கு ரூ.4.5 கோடி லஞ்சம் கொடுப்பதற்காகவும் கெஜ்ரிவால் மதுபான ஊழலில் அவரது (கவிதா) பெயர் இடம் பெற்றுள்ளது என பதிவு செய்துள்ளார்.

கவிதா

கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி கலால் கொள்கை வழக்கில், மதுபான மாபியாவுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்தவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா என்று  பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிர்தா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர். இதனையடுத்து மதுபான கொள்கை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தியதற்காக கவிதா அவர்களுக்கு மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.