அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. ராகுல் காந்தியை வலியுறுத்திய பா.ஜ.க.
2024ல் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காந்தி-நேரு குடும்பத்திற்கு அமேதியுடன் பழைய உறவு உள்ளது. அதை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ராகுல் காந்தி 2024ல் அமேதியில் போட்டியிடுவார் என்று தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியை மீண்டும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் எம்.பி.யாக தேர்வு செய்து,டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதே அமேதி மக்களிடம் எனது வேண்டுகோள் என தெரிவித்தார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அஜய் ராயின் கருத்துக்கு பா.ஜ.க. எதிர்வினையாற்றியுள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், ராகுல் காந்தி முழுமையான மனிதராக இருந்தால், அவர் 2024ல் அமேதிக்கான தனது முயற்சியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், அஜய் ராய் போன்ற கூட்டாளிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது. மேலும் அவர் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் (ராகுல் காந்தி) சவாலுக்கு தயாராக உள்ளாரா? என பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமேதி மக்களவை தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர். இந்நிலையில் 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அந்த தேர்தலில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியிடம் அமேதி மக்களவை தொகுதியை இழந்தார். இருப்பினும், கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.