பா.ஜ.க.வுக்கு தாவ தயாராக இருக்கும் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. பா.ஜ.க. போடும் மாஸ்டர் பிளான்

 
பா.ஜ.க.

அடுத்த மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜ.க.வில் இணைய தயாராக உள்ளனர். அவர்கள் பா.ஜ.க.வில் இணையும்பட்சத்தில், குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் கை ஓங்கும்.

ராம் நாத் கோவிந்த்

மொத்தம் 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்களும், ஆம் ஆத்மி மற்றும் எம்.ஜி.பி. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராக உள்ளனர். ஆனால் முதலில் குடியரசு தலைவர் தேர்தலில் அவர்களை கட்சி மாறி வாக்களிக்க சொல்லி விட்டு, பின்பு அவர்களை கட்சியில் இணைத்து கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்.

காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராக இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பா.ஜ.க. அரசாங்கம் தொல்லை கொடுக்கும் என்பதை இதற்கு முக்கிய காரணம். பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளது. அந்த கட்டிடத்தை இடிக்குமாறு அவர்களுக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மற்ற  வர்த்தகங்களும் குறிவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.