அம்பானியும் அதானியும் இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அடித்துவிடும் அர்ஜூன் சம்பத்
அம்பானி, அதானி போன்றவர்கள் தேசபக்தி உடையவர்கள். அவர்கள் இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் என்று அடித்து விட்டிருக்கிறார் அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி சுதந்திரப் போராட்ட நினைவு இடங்களுக்கு பிரச்சாரப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவள்ளூரில் உள்ள மக்களுக்கு தேசியக் கொடிய வழங்கி அங்குள்ள காந்தியடிகள், அம்பேத்கர் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்து மக்கள் கட்சியின் சார்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி காந்தியடிகள், கஸ்தூரிபாய் ,அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை சந்தித்து அவர்களுக்கு பாத பூஜையையும் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் , 5ஜி விவகாரம் குறித்த கேள்விக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு புகழ்பெற்றவர்கள் ஆ. ராசா -கனிமொழி. இந்த பயிற்சி காலத்தில் முறைகேடு நடந்தால் அதை ஆ.ராச பாராளுமன்றத்தில் தான் பேச வேண்டும். இல்லை வழக்கு தொடர வேண்டும் . ஆனால் மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்தை ஏன் செய்து வருகிறார்? என்ற கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், உலக பணக்காரர்கள் வரிசையில் சன் டிவி குடும்பம், கருணாநிதி குடும்பம் தான் முன்னேறி வருகிறார்கள். மற்றபடி அம்பானி ,அதானி போன்றவர்கள் தேச பக்தி உடையவர்கள். அவர்கள் இந்திய மக்களுக்காக பாடுபட்டு வருகிறார்கள் . வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களை நம் நாட்டுக்குள் விடாமல் அவர்களே இங்கு தொழில் செய்கின்றார்கள். அவர்கள் இந்தியர்களுக்காக பாடுபடுகின்றார்கள் . அவர்களிடம் சேரும் பணம் இந்தியர்களிடம் சேரும் பணம் ஆகும். , அம்பானி அதானி போன்றவர்கள் இந்தியர்களுக்காக பாடுபடுகிறார்கள் என்றும் அவர்களிடம் போய் சேரும் பணம் இந்தியர்களிடம் சேரும் பணம் வேண்டும் அர்ஜுன் சம்பத் சொன்னது அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.