காங்கிரஸின் தோல்விக்கு காந்திகள் காரணம்.. சோனியா காந்தி குடும்பத்தை சாடிய கேப்டன் அமரீந்தர் சிங்

 
பிரியங்கா, ராகுல்,சோனியா

பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் வெட்கக்கேடான தோல்விக்கு காந்திகள் தான் காரணம் என சோனியா குடும்பத்தை கேப்டன் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் பஞ்சாபில் மட்டுமல்ல, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் தோல்வியடைந்துள்ளது. மேலும் கட்சியின் வெட்கக்கேடான தோல்விக்கு காந்திகளே (சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி) காரணம். நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதுதான் உண்மை. 

கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாபில் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவின் கட்சி விரோத அறிக்கைகள் பஞ்சாபில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு காரணம் என காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பல மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சில துதிபாடுபவர்களுக்கு  ஆதரவாக என்னை பணிநீக்கம் செய்யும்வரை, மாநிலத்தில் காங்கிரஸ் வசதியாக இருந்தது. நவ்ஜோத் சிங் சித்து  போன்ற நிலையற்ற மற்றும் ஆடம்பரமான நபரை ஆதரிக்கவும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் சரண்ஜித் சிங் சன்னி போன்ற ஊழல்வாதியை முதல்வராக அறிவிக்கவும் முடிவு செய்த நாளில், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தனது சொந்த கல்லறையை தோண்டியது. 

காங்கிரஸ்

எனது ஆட்சிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு இருப்பதாக கூறும் காங்கிரஸ் தலைவர்கள், 2017ம் ஆண்டு முதல்  2021 பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வரை கட்சிக்காக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றேன் என்பதை வசதியாக மறந்து விட்டார்கள். இந்த தலைவர்கள் பழியை வேறொருவர் மீது மாற்றி குடும்பத்தை காப்பாற்ற முயலும் துதிபாடிகள். சுவரில் எழுதப்பட்டதற்கு கண்களை மூடிக்கொள்கிறார்கள். தற்போதைய அமைப்பில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. இவ்வாறு இவர் தெரிவித்தார்.