கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. இது மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க செய்த செலவா?.. காங்கிரஸ் தாக்கு

 
கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இது மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க செய்த செலவா? என்று மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரையிலான காலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் கேஸ் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் வெளியிட்ட புள்ளிவிவர சார்ட்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் டிவிட்டரில், எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு, மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க செய்த செலவா இது? என்று பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராகினி நாயக் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதும், பணவீக்கத்தால் மக்களின் முதுகு உடைக்கப்படாமல் இருந்தால் மிகப்பெரிய ஆச்சரியம். பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை, நாட்டை எல்லா வகையிலும் ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. ஒரு காலத்தில் சீனாவுக்கு சிகப்பு கண் காட்டுவதாக பிரதமர் பேசியிருந்தார், பணவீக்கத்துக்கு எப்போது அவர் சிவப்புக் கண் காட்டுவார் என நாடே காத்திருக்கிறது.

ராகினி நாயக்

மன்மோகன் ஜி காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம், அதிகமான விலையில் இருந்த அத்தியாவசிய எரிசக்தி பொருட்களை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்றது. ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் எல்லாமே மலிவாக இருந்தாலும் அது மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த எல்.பி.ஜி. சிலிண்டரை யார் வாங்க முடியும். 2021-22ம் நிதியாண்டில் 3.59 கோடி வாடிக்கையாளர்களால் ரீபில் வாங்க முடியவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோதுமை மாவு, தயிர் மற்றும் மோர் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விலக்குகளை திரும்ப பெறுவதற்கான அரசின் முடிவு மக்கள் விரோதம். மக்களின் குரலை வீதி முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் எழுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.