“காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்துவரும் அழகிரியே ராஜினாமா செய்” போஸ்டரால் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி, கூட்டத்தில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரி மற்றும் குண்டுராவை முற்றுகையிட்டு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் மூன்று மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடிரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளாகி அடிதடியாக மாறியது. அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் 3 பேருக்கு ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்து வரும் ஊழல்வாதி, ஆர்எஸ்எஸ் இன் கைக்கூலி கே. எஸ். அழகிரியே, ராஜினாமா செய் என்ற வாசகங்கள் இருந்தன. இந்த போஸ்டரை ஒட்டியது யார் என்பது தெரியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ்.அழகிரி பதவி விலககோரி அவரது சொந்த ஊரான சிதம்பரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.