ஹிட்லருக்கு ஒரு பிரச்சார அதிகாரிதான், பா.ஜ.க.வில் அனைத்து அமைச்சர்களும் பிரச்சார அதிகாரிகள்தான்.. அகிலேஷ் யாதவ்

 
ஹிட்லர்

ஹிட்லருக்கு ஒரே ஒரு பிரச்சார அதிகாரி மட்டுமே இருந்தார், பா.ஜ.க.வில் அனைத்து அமைச்சர்களும் பிரச்சார அதிகாரிகளாக மாறி விட்டனர் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தகவலை அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோபால் யாதவ் உறுதி செய்துள்ளார். கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அகிலேஷ் யாதவ் தொண்டர்கள் மத்தியில் அகிலேஷ் யாதவ் பேசுகையில் கூறியதாவது: 

அகிலேஷ் யாதவ்

நேதாஜி (முலாயம் சிங் யாதவ்) எப்போதுமே சமாஜ்வாடி கட்சி தேசிய கட்சியாக மாற வேண்டும் என்று விரும்பினார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நேதாஜியும் நாங்களும் நிறைய முயற்சி செய்தோம். அடுத்த முறை சந்திக்கும்போது, சமாஜ்வாடி கட்சி தேசிய கட்சியாக வரும் என அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தை பூத் மட்டத்திற்கு கொண்டு  செல்ல வேண்டும். அவர்களை (பா.ஜ.க.) பூத் அளவில் தோற்கடிக்கும் போது, நம் கிராமங்களில் அவர்களை தோற்கடிப்போம்.

பா.ஜ.க.

கட்சி தலைவராக என்னை தேர்ந்தெடுத்தற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக ஊடகங்கள் மூலம் எதிர்ப்பை உடைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஹிட்லருக்கு ஒரே ஒரு பிரச்சார அதிகாரி மட்டுமே இருந்தார். பா.ஜ.க.வில் அனைத்து அமைச்சர்களும் பிரச்சார அதிகாரிகளாக மாறி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2017ல் நடந்த சமாஜ்வாடி கட்சியின் அவசர கூட்டத்தின்போது அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சயின் கட்டுபாட்டை தனது தந்தை முலாயம் சிங் யாதவிடம் இருந்து கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.