விலை உயர்வு, வேலையின்மை காரணமாக மக்கள் எதிர்க்கொள்ளும் கஷ்டங்களை யோகி அரசு புறக்கணிக்கிறது... அகிலேஷ்

 
அகிலேஷ் யாதவ்

பொருட்களின் விலை மற்றும் வேலையின்மை காரணமாக மக்கள் எதிர்க்கொள்ளும் கஷ்டங்களை யோகி அரசாங்கம் புறக்கணிக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உ.பி. சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மாநில அரசின் செலவினம் தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. இந்நிலையில்  நேற்று பணவீக்கம் தொடர்பாக யோகி அரசை அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பா.ஜ.க.

மாநிலத்தில் அதிகரித்து வரும் பொருட்களின் விலை மற்றும் வேலையின்மை காரணமாக மக்கள் எதிர்க்கொள்ளும் கஷ்டங்களை யோகி அரசாங்கம் புறக்கணிக்கிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பா.ஜ.க. அரசு கூறியது. ஆனால் அதற்கான பதில் அவர்களிடம் இருக்கிறதா? பணவீக்கம் அதிகரித்து வருகிறது, பருப்பு, எண்ணெய், சிமெண்ட் மற்றும் உருக்கு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. கிராமங்களில் அவநம்பிக்கை உணர்வு உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஜெயந்த் சவுத்ரி

மாநிலங்களவை தேர்தலுக்கான கூட்டு வேட்பாளராக சமாஜ்வாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்.எல்.டி.) கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியின் பெயரை சமாஜ்வாடி கட்சி நேற்று அறிவித்தது. முதலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என யூக செய்திகள் வெளியானது.