பா.ஜ.க. அரசு அசம் கான் மீது தினமும் பொய் வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்துகிறது... அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

உத்தர பிரதேச பா.ஜ.க. அரசு அசம் கான் மீது தினமும் பொய் வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்துகிறது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். 

உத்தர பிரதேசத்தில் இரு சமூகத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய வழக்கில், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அசம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் தகுதி செய்யப்படுவர். இதன்படி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து அசம் கான் தகுதி நீக்கம செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தர பிரதேச சட்டப்பேரவையில் அசம் கானை தகுதி நீக்கம் செய்வதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

அசம் கான்

இந்த சூழ்நிலையில், அசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க.வை சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது: அசம் கான் பா.ஜ.க. அரசின் இலக்கு. தினமும் அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார். அசம் கான் மதவாத சக்திகளின் தீவிர போட்டியாளராக இருப்பதாலும், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தில் உறுதியாக இருப்பதாலும் பா.ஜ.க.வுக்கு அவர் கண்புரையாக தெரிகிறார்.

பா.ஜ.க.

அவர் (அசம் கான்) அரசியல் சாசனத்திற்காகவும், மதச்சார்பின்மைக்காவும் போராடிய தலைவர். அவரது ஜௌஹர் பல்கலைக்கழகம் பா.ஜ.க.வால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறது. அசம் கான் அமைச்சராக இருந்தபோது, கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தார். மேலும் இந்த நிகழ்வு ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்கான பாடமாக மாறியது, அதில் அவரது முயற்சிகள் பாராட்டப்பட்டது. இது குறித்து அங்கு வந் பேச  வேண்டும் என்று ஹார்வர்ட் பல்கைலைக்கழகம் கூட அழைத்தது. இது பா.ஜ.க.வுக்கு பிடிக்கவில்லை. அசம் கான் கல்வி நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. எனவே, அசம் கான் மீது பொய் வழக்குகளை குவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.