2019ல் போராடிய அனைத்து ஜனநாயக மக்களும் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டால் வீதிக்கு வருவார்கள்... அசாம் எம்.எல்.ஏ.

 
அகில் கோகோய்

2019ல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக போராடிய அனைத்து ஜனநாயக மக்களும் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டால் வீதிக்கு (போராட) வருவார்கள் என  அசாம் எம்.எல்.ஏ. அகில் கோகோய் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேசுகையில், கோவிட்-19  முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) அரசாங்கம் விரைவில் செயல்படுத்தும். களத்தில் செயல்படுத்தபடாது என குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வதந்திகளை பரப்புகிறது. ஆனால் கோவிட் அலை முடியும் தருணத்தில் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்துவோம் என நான் கூற விரும்புகிறேன். மம்தா சகோதரி ஊடுருவலை விரும்புகிறார். குடியுரிமை திருத்த சட்டம் இருந்தது, உள்ளது மற்றும் உண்மையாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் அசாம் எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா

அசாமின் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ.வும், ரைஜோர் தளத்தின் தலைவருமான அகில் கோகோய் கூறியதாவது: உள்துறை அமைச்சரின் அறிவிப்பை அசாமில் உள்ள மக்கள் ஏற்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும். குடியுரிமை திருத்த சட்டம் அமலாக்கத்தை நாங்கள் எதிர்ப்போம். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 2019ல் சட்டத்துக்கு எதிராக போராடிய அனைத்து ஜனநாயக மக்களும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் வீதிக்கு வருவார்கள். 

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் (கோப்புப்படம்)

நாடு முழுவதும் உள்ள மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் முன்னோக்கி சென்றால், வடகிழக்கு மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெருக்களில் இறங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள். குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு முரணானது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவை இந்து நாடாக ஆக்குவதற்கான ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் கருவிதான் குடியுரிமை திருத்த சட்டம். எனவே இந்த சட்டத்தை அனைத்து ஜனநாயக மக்களும் பல்லும், நகமுமாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.