பிரதமர் மோடி முன்னிலையில் மகாராஷ்டிரா கவர்னரை மறைமுகமாக தாக்கிய அஜித் பவார்

 
பகத் சிங் கோஷ்யாரி

முக்கிய பதவிகளில் இருக்கும் சிலர் மகாராஷ்டிரா மற்றும் அதன் குடிமக்களால்  ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர் என பிரதமர் மோடி முன்னிலையில் கவர்னர் கோஷ்யாரியை மறைமுகமாக துணை முதல்வர் அஜித் பவார் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராவில் அண்மையில் அம்மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நிகழ்ச்சி ஒன்றில் குருவின் பங்கினை பற்றி பேசுகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சந்திரகுப்த மௌரிய தொடர்பான உதாரணங்களை காட்டி பேசினார். இது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இந்நிலையில் நேற்று புனேவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவரது முன்னிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கவர்னரை மறைமுகமாக தாக்கினார்.

அஜித் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், பிரதமரின் கவனத்திற்கு நான் ஒன்றை கொண்டு வர விரும்புகிறேன். சமீப காலமாக, முக்கியமான பதவிகளை (கவர்னர்) வகிக்கும் சிலர், மகாராஷ்டிரா மற்றும் அதன் குடிமக்களால்  ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் அவரது தாயார் ராஜ்மாதா ஜிஜாவ்  ஆகியோர் சுயராஜ்யத்தை உருவாக்கினர். 

புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் மோடி

மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் கிராந்தியஜோதி சாவித்ரிபாய் பூலே (மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதிகள்) பெண்கள் கல்விக்கு அடித்தளமிட்டனர். யாரிடமும் வெறுப்பு இல்லாமல்  அவர்களின் பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் மற்றும்  வளர்ச்சி பணிகளில் அரசியலை கொண்டு வராமல்  செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.