ராஜ் தாக்கரேவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.. மகாராஷ்டிரா துணை முதல்வர்

 
இது என்னடா மகாராஷ்டிரா அரசியலுக்கு வந்த சோதனை! ஒரு சீட் ஜெயிச்ச ராஜ் தாக்கரேவும் சரத் பவாருடன் சந்திப்பு!

மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலி பெருக்கிகள் அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே காலக்கெடு விதித்துள்ளநிலையில், ராஜ் தாக்கரேவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என தெரிவித்தார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

ராஜ் தாக்கரேவின் பேச்சு மகாராஷ்டிரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அஜித் பவார் பதிலளிக்கையில், தாக்கரேவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சரியான நேரம் வரும்போது, அதற்கு நான் நிச்சயமாக பதிலளிப்பேன், ஒவ்வொரு கேள்விக்கும் என்னிடம் பதில் இருக்கிறது என தெரிவித்தார்.

அஜித் பவார்

முன்னதாக சரத் பவார் பேட்டி ஒன்றில்,  நீதிமன்ற உத்தரவு குறித்து மாநில அரசு விவாதிக்கும். மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸே பாட்டீலிடம் இது குறித்து பேசப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு ராஜ் தாக்கரே, அஜித் பவார் எந்த மதத்தையும் நம்பாத நாத்திகர் என்று குறிப்பிட்டு இருந்தார். மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற மகாராஷ்டிரா அரசு உத்தரவிடுமா என்பது மே 3ம் தேதிக்குள் தெரிந்து விடும்.