மக்களை தூண்டி விடுவது வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உதவுமா?. .. ராஜ் தாக்கரேவை மறைமுகமாக சாடிய பவார்

 
அஜித் பவார்

மசூதிகளில் ஒலி பெருக்கி விவகாரத்தை குறிப்பிட்டு, மக்களை தூண்டி விடுவது வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உதவுமா? என எம்.என்.எஸ். கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மறைமுகமாக சாடினார்.

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கட்சி கூட்டத்தில் பேசுகையில், நான் தொழுகைக்கு எதிரானவன் அல்ல, நீங்கள் உங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் பாடல்களை இசைப்போம் என்று மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு, மக்களை தூண்டி விடுவது வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உதவுமா? என ராஜ் தாக்கரேவை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மறைமுகமாக சாடினார்.

ராஜ்தாக்கரே

அஹமத்நகர் மாவட்டத்தில் ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பேசுகையில் கூறியதாவது: இது போன்ற (ஒலி பெருக்கி விவகாரம்) அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் அவர் (ராஜ் தாக்கரே) என்ன சாதிப்பார்?. மக்களை தூண்டி விடுவது வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உதவுமா?. ஷாஹு, பூலே, அம்பேத்கர் ஆகியோரின் மகாராஷ்டிரா, தேர்தலை மனதில் வைத்து ஒருவரை மகிழ்விப்பதற்காக பேசும் பேச்சை ஏற்க முடியாது. மகாராஷ்டிரா மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். இருப்பினும் சிலர் (ராஜ் தாக்கரே) வகுப்புவாத பதட்டங்களை தூண்டுவதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

சமூகங்கள் மற்றும் மதங்களில் எந்தவிதமான பிளவுகளையும் ஏற்படுத்தாமல் சமூகத்தில் மத நல்லிணக்கத்தை நிலை நாட்ட முடிந்துள்ளது. ஆனால் சில கட்சிகளின் தலைவர்கள் ஒலிபெருக்கிகளை (ஹனுமான் பாடல் இசைக்க) பொருத்துவதற்கு முயற்சி செய்கின்றனர். இது  போன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்கள் இது போன்ற அறிக்கைகள் மகாராஷ்டிராவையும், நாட்டையும் எங்கு கொண்டு செல்லும் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். வேறுபிரச்சினைகள் இல்லையா? மக்களை தூண்டிவிடுவதன் மூலம் மக்களின் ரொட்டி மற்றும் வெண்ணெய் பிரச்சினை தீர்க்கப்படுமா? கோவிட்-19 தொற்றுநோயின் போது வேலை இழந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.