பீகாரில் பா.ஜ.க. வின் வெற்றிக்கு காரணம் அசாதுதீன் ஓவைசியா?..
பீகாரில் கோபால் கஞ்ச் இடைத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சியும், லாலு பிரசாத் யாதவின் மைத்துனரின் மனைவி இந்திரா யாதவும் போட்டியிடவில்லை என்றால் பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான் என்று தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மொகாமா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. கோபால் கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். கோபால் கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முக்கிய பங்கினை கொண்டுள்ளன.
கோபால் கஞ்ச் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் குசம் தேவியும், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மோகன் பிரசாத் குப்தாவும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் அப்துல் சலாமும், பகுஜன் கட்சி சார்பில் லாலு பிரசாத் யாதவின் மைத்துனரின் மனைவி இந்திரா யாதவும் போட்டியிட்டனர். கோபால் கஞ்ச் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட குசம் தேவி 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் மோகன் பிரசாத் குப்தாவை தோற்கடித்தார். குசம் தேவி மொத்தம் 70,053 வாக்குகளும், மோகன் பிரசாத் குப்தா 68,259 வாக்குகளும் பெற்றனர்.
கோபால் கஞ்ச் இடைத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி வேட்பாளர் அப்துல் சலாமும், லாலு பிரசாத் யாதவின் மைத்துனரின் மனைவி இந்திரா யாதவும் போட்டியிடவில்லை என்றால் பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் இவர்கள் இருவரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வாக்குகளை சிதற செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஏ.எம்.ஐ.எம்.ஐ. கட்சி வேட்பாளர் அப்துல் சலாம் 12,214 வாக்குகளை பெற்றுள்ளார். இது பா.ஜ.க. வேட்பாளர் குசம் தேவியின் வெற்றி வித்தியாசத்தை காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும். பகுஜன் சமாஜ் சட்சி சார்பில் போட்டியிட்ட இந்திரா யாதவ் 8,853 வாக்குகளை பெற்று இருந்தார். இது குசம் தேவியின் வெற்றி வித்தியாசத்தை காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகமாகும்.