பியூன்களாக கூட நியமிக்க தகுதியில்லாதவர்களுக்கு காங்கிரஸில் முக்கிய பொறுப்புகள்.. பா.ஜ.க.வில் இணைந்த தர்விந்தர் சிங்

 
தர்விந்தர் சிங் மர்வா

பியூன்களாக கூட நியமிக்க முடியாதவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் காங்கிரஸில் வழங்கப்படுகின்றன என்று பா.ஜ.க.வில் இணைந்த தர்விந்தர் சிங் மர்வா குற்றம் சாட்டினார்.


டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 3 முறை பதவி வகித்தவருமான தர்விந்தர் சிங் மர்வா நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஞ்சிந்தர் சிங் சிர்தா ஆகியோர் முன்னிலையில் தர்விந்தர் சிங் மர்வா பா.ஜ.க.வில் இணைந்தார்.

பா.ஜ.க.

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தர்விந்தர் சிங் மர்வா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கட்சியில் என்னை இணைத்து கொண்ட பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. கட்சிக்கு (பா.ஜ.க.) கடைசி மூச்சு வரை சேவை செய்வேன். மோடியை போல் பிரதமர் யாரும் இருந்ததில்லை. கடந்த 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுமாறு அமித் ஷா என்னிடம் கூறினார். என் வாழ்நாள் முழுவதையம், இளமையையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்தேன். ஆனால் கட்சிக்கு அனைத்தையும் கொடுத்த தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. உழைப்பாளிகளுக்கு பதிலாக யாரும் அறியாதவர்கள் பொதுச் செயலாளர்களாக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பியூன்களாக கூட நியமிக்க முடியாதவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் காங்கிரஸில் வழங்கப்படுகின்றன. ஜி 23 தலைவர்கள் (காங்கிரஸ் தலைமையில் மாற்றம் கோரிய தலைவர்கள்) பா.ஜ.க.வில் இணைய வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். ராகுல் காந்தியை சந்திக்க நான் ஒன்றரை ஆண்டுகளாக நேரம் கோரியும் எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. அவர் எந்த தொண்டரையும் சந்திக்கவில்லை.