அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பயமா? செந்தில்குமார் எம்பிக்கு பாஜக கேள்வி

 
se


அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது குறிப்பாக பூமி பூஜைகள் நடத்தக் கூடாது என்று திமுக எம்பி செந்தில்குமார் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்.  

 தர்மபுரி மாவட்டத்தில் ஆலாபுரம் ஏரியை சீரமைக்கும் பணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த செந்தில்குமார் எம்பி பூஜை செய்யும் இடத்தில் ஆவேசமானார்.   பூஜை செய்ய வந்திருந்த புரோகிதரை அங்கிருந்து வெளியேற்றினார்.

boo

புரோகிதரை மட்டும் வைத்து செய்கிறீர்களே? கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் இமாம் எங்கே? திராவிட கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே ?என்று கொதித்து எழுந்தார்.  முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இப்படி நடைபெறுகிறதா? இது திராவிட மாடல ஆட்சி.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் கடுமை காட்டினார் செந்தில்குமார்.

 இந்த ஆவேசம் கடும் விவாதத்திற்கு உள்ளானது. பலரும் செந்தில்குமார் எம்பிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் திராவிடர் கழக தலைவர் வீரமணியும் அவரது கழகத்தினரும் செந்தில்குமார் எம்பியை பாராட்டினர். அதன் பின்னரும் சில இடங்களில் பூமி பூஜை நடந்த போது அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து பூமி பூஜை செய்ய விடாமல் தடுத்தார். இதனால் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவினரே செந்தில்குமார் எம்பி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

se

 இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் இன்று 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி பூமி பூஜையில் பங்கேற்று உள்ளதால் அவரை எதிர்த்து திராணி இருக்கிறதா என்று கேட்கிறார் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

’’என்ன! செந்தில்குமார் எம்.பி? 'பூமி பூஜை விழா' நடத்துகிறார்களே?அரசு விழாவில் பூமி பூஜையா? என்று பொங்கி எழவில்லையே ஏன்?உங்கள் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் மட்டும் தானா?  அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பயமா? இவ்வளவு தான் உங்கள் கொள்கை பிடிப்பா? இதை எதிர்த்து கேள்வி கேட்க தைரியமுள்ளதா? திராணியுள்ளதா?’’என்று கேட்கிறார்.