ரூ.30 லட்சம் இருந்தால் பெட்டிக் கடையாவது வைத்து பிழைத்துக் கொள்ளலாம்- ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji

போக்குவரத்து தொழிலாளிக்கு உரிய ஓய்வு கால பணபலனான  30 லட்சம் ரூபாய் கொடுத்தால்  பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக் கொள்வார்கள் என்று  விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார்.


14 வது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்ததை கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு DA மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும் இதுநாள் வரையிலும் 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் என்பதை 4 ஆண்டுக்கு ஒப்பந்தம் என மாற்றியதை கண்டித்தும் அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற இருநபர் அமர்வில் தீர்ப்பு இன்று காலை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும்  விருதுநகர் அ.இ.அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி‌.ராஜேந்திர பாலாஜி
பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

அதன்பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் போது ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணபலன்கள் உடனடியாக வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் ஆகி விட்டது. வெறும் கையோடு வீட்டிற்கு செல்கிறான்.
30 லட்சம் ரூபாய் பணம் இருந்தால் அவர் ஒரு பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் கலைஞருக்கு 80 கோடி மதிப்பில் பேனா வைக்க இருப்பதாக சொல்கிறார்கள். அது ஒழுகாத பேனா,எழுதாத பேனா, மையில்லாத பேனாவுக்கு 80 கோடியா? ஆனால் உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டால் பட்டை நாமம். இந்த நிலையைப் போக்கவே விடியா திமுக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்" என தெரிவித்தார்.