மத்திய அமைப்புகள் ஒரு வகையில் பா.ஜ.க.வின் விளம்பர இயந்திரமாக மாறி விட்டன... ஆதித்யா தாக்கரே
மத்திய விசாரணை அமைப்புகள் ஒரு வகையில் பா.ஜ.க.வின் விளம்பர இயந்திரமாக மாறி விட்டன என சிவ சேனாவின் ஆதித்யா தாக்கரே குற்றம் சாட்டினார்.
சிவ சேனா கவுன்சிலரும், பிரஹன்மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவருமான யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையின் இந்த சோதனைக்கு சிவ சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய விசாரணை அமைப்புகள் பா.ஜ.க.வின் விளம்பர இயந்திரமாக மாறி விட்டன என ஆதித்யா தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் கேபினட் அமைச்சரும், சிவ சேனாவின் இளம் தலைவருமான ஆதித்யா தாக்கரே கூறுகையில், கடந்த காலங்களிலும் மத்திய அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன. இது மேற்கு வங்கம், ஆந்திராவில் நடந்தது இப்போது மகாராஷ்டிராவிலும் நடக்கிறது. மத்திய அமைப்புகள் ஒரு வகையில் பா.ஜ.க.வின் விளம்பர இயந்திரமாக மாறி விட்டன. மகாராஷ்டிரா அடிபணியாது என்று தெரிவித்தார்.
அண்மையில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அமைப்புகள் எங்கள் கட்சி தலைவர்களை தொந்தரவு செய்கின்றன. இந்த அமைப்புகளை பயன்படுத்தி நமது தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மகா விகாஸ் அகாடி அரசு மார்ச் 10ம் தேதி கவிழும் என பா.ஜக. தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். இந்த வதந்திகள் அனைத்தும் நான் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் தொடங்கியது என தெரிவித்தார்.