எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு பா.ஜ.க. அரசு மரியாதை கொடுக்கவில்லை, இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை.. காங்கிரஸ்

 
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு பா.ஜ.க. அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை என்றும் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து அந்த கட்சி தொண்டர்களை டெல்லி போலீசார் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது.

காங்கிரஸார் போராட்டம்

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மிகவும் வேதனையுடனும், வலியுடனும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப காங்கிரஸ் கட்சி அமைதியான அரசியல் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் டெல்லி காவல்துறை கிளர்ச்சியின் நோக்கத்தை முறியடிக்க அத்துமீறிய மற்றும் அளவுக்கதிகமான சக்திகளை கையாள்கிறது. 

பிரதமர் மோடி

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் மீது இரக்கமற்ற முறையில் போலீசார் தாக்கினர். இது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரடியான அவமதிப்பை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின் முக்கிய சாராம்சம் என்பது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம். ஆனால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு இந்த அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.