பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பயப்படுகிறார்.. பா.ஜ.க.வுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி

 
மோடி

பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பயப்படுகிறார் என்று பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் இது ஆட்சியமைக்க தேவையானதை காட்டிலும் 5 இடங்கள் அதிகமாகும். அதேசமயம் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது.

ராகுல் காந்தி

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ள நிலையிலும், ராகுல் காந்தியை கிண்டல் அடிப்பதை பா.ஜ.க. தலைவர்கள் நிறுத்தவில்லை. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், இமாச்சல பிரதேச வெற்றி காங்கிரஸூக்கு பாடம். மாநில தேர்தல்களில் இருந்து ராகுல் காந்தியை ஒதுக்கி வைக்கவும் என பதிவு செய்து இருந்தார். அதாவது மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் பிரச்சாரம் செய்தால் அந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று விடும் என்று மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

அமில் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பயப்படுகிறார் என தெரிவித்தார். இமாச்சல பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவரும், கட்சியின் சட்டப்பிரிவு செயலருமான தீபக் சர்மா கூறுகையில். காங்கிரஸூக்கு பா.ஜ.க.வின் ஆலோசனை தேவையில்லை. இமாச்சல பிரதேச மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர்கள் (பா.ஜ.க.) உள்நோக்கி பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.