நான் குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்பேன் ஆனால் நயவஞ்சகர்களிடம் அல்ல.. பா.ஜ.க.வை தாக்கிய ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

நான் தவறு செய்தேன், ஒப்புக்கொள்கிறேன் அதற்காக குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்பேன் ஆனால் நயவஞ்சகர்களிடம் அல்ல என்று பா.ஜ.க. தலைவர்களை ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி தாக்கினார்.

ஜி.எஸ்.டி., சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, வேலையின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்களின் போது, அந்த கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முரை ராஷ்டிரபத்னி என்று குறிப்பிட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க.  எம்.பி.க்கள் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

திரௌபதி முர்மு

இதனால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது. இதற்கிடையே ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கவனக்குறைவாக ராஷ்டிரபத்னி என்ற வார்த்தையை ஒரு முறை பயன்படுத்தினேன், அது நாக்கு நழுவியது. நான் ஒரு போதும் குடியரசு தலைவருக்கு எந்த அவமரியாதையையும் ஏற்படுத்தவில்லை. நான் பெங்காலி, இந்தி மொழி பழக்கமில்லை. நான் தவறு செய்தேன், ஒப்புக்கொள்கிறேன். நான் குடியரசு தலைவரிடம் நேரம் கேட்டுள்ளேன், அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால்இந்த நயவஞ்சகர்களிடம் (பா.ஜ.க.) அல்ல. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி சிறிய மண் மேட்டை மலையாக உருவாக்குகிறது என தெரிவித்தார்.

மோடி

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து ஆஹிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ள சூழலில், நேற்று குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், முதன்முறையாக பழங்குடி சமூகத்தில் இருந்து வந்த நாட்டின் மகள் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அடைந்துள்ளார். நாடு திரௌபதி முர்முவை குடியரசு தலைவராக்கியுள்ளது. 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் தருணம் என உயர்வாக பேசினார்.