பைத்தியக்காரனுக்கு பதில் சொல்வது சரியல்ல.. மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

 
காங்கிரஸ்

காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என்று குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜிக்கு, பைத்தியக்காரனுக்கு பதில் சொல்வது சரியல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொண்டது. 5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். மேலும், காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரஸை சார்ந்திருக்க முடியாது என்றும் விமர்சனம் செய்து இருந்தார்.

மம்தா பானர்ஜி, லியாண்டர் பயஸ்

காங்கிரஸை விமர்சனம் செய்த மம்தா பானர்ஜிக்கு அந்த கட்சியின் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பைத்தியக்காரனுக்கு பதில் சொல்வது சரியல்ல. காங்கிரஸூக்கு  இந்தியா முழுவதும் 700 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அது தீதியிடம் (மம்தா பானர்ஜி) இருக்கிறதா? எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் காங்கிரஸிடம் உள்ளது அது அவரிடம் (மம்தா பானர்ஜி) இருக்கிறதா?.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

பா.ஜ.க.வை மகிழ்வித்து அதன் ஏஜெண்டாக செயல்பட அவர் (மம்தா பானர்ஜி) இது போன்ற விஷயங்களை (காங்கிரஸ் நம்பகத்தன்மை இழந்து வருகிறது) சொல்கிறார். காங்கிரஸூக்கு எதிராக நீங்கள் கருத்து தெரிவிக்கிறீர்கள்?. காங்கிரஸ் இல்லையென்றால் மம்தா பானர்ஜி போன்றவர்கள் பிறந்திருக்க (அரசியலுக்கு வந்திருக்க) மாட்டார்கள். இதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ.க.வை மகிழ்விக்க கோவா சென்றீர்கள்,காங்கிரஸை பலவீனப்படுத்தினீர்கள். இது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.