ஹிஜாப் வழக்கு.. விசாரிக்கும் நீதிபதி மீது விமர்சனம் - கன்னட நடிகர் அதிரடி கைது!
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை பெரும் பூதாகரமாகியுள்ளது. இது அம்மாநிலத்தில் ஒருவித பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. ஹிஜாப் விவகாரம் சகோதரத்துவம் பேணும் இந்து இஸ்லாமியர்களிடையே மத மோதலாக வெடித்துவிடுமோ என்பது ஒட்டுமொத்த தேசத்தின் அச்சக்குரலாக உள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவினைவாதம் அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் விதமாக அமைந்துள்ளது.
இருப்பினும் இவ்விவகாரத்தை நீதித்துறை ஓரளவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கல்லூரியால் மறுக்கப்பட்ட ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளால் தொடரப்பட்ட வழக்கு கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது மிகவும் சென்சிட்டிவ் ஆன விவகாரம் என்பதால் நீதிமன்றம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய மத சட்டத்தின்படி எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிவது கட்டாயமா, ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் வருமா என பரிசீலித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் கிருஷ்ணா தீக்சித். இவர் குறித்து கன்னட நடிகரும் செயற்பாட்டாளருமான சேத்தன் குமார் அஹிம்சா தன்னுடைய ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன பிளாஸ்பேக் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். கற்பழிக்கப்பட்ட பெண் எப்படி தூங்கலாம்; தூங்கிவிட்டு புகார் கொடுக்கலாமா என்று கேட்டு கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீனும் வழங்கினார். இதனை அப்போதே விமர்சித்த நடிகர் அஹிம்சா, 21ஆம் நூற்றாண்டில் நீதிபதி கிருஷ்ணா பெண்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்திருப்பதாக கூறியிருந்தார்.
This is a tweet I wrote nearly two years ago regarding a Karnataka High Court decision
— Chetan Kumar Ahimsa / ಚೇತನ್ ಅಹಿಂಸಾ (@ChetanAhimsa) February 16, 2022
Justice Krishna Dixit made such disturbing comments in a rape case
Now this same judge is determining whether #hijabs are acceptable or not in govt schools
Does he have the clarity required? pic.twitter.com/Vg8VRXmJTW
இச்சூழலில் தன்னுடைய பழைய ட்வீட்டை தோண்டியெடுத்து சமீபத்தில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில்,"2 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதி தான் ஹிஜாப் வழக்கையும் விசாரிக்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு சரியான புரிதல் இருக்கிறதா?” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இதையடுத்து போலீசார் தாமாக முன்வந்து சேத்தன் குமார் அஹிம்சா மீது இருபிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவர் மீது வேண்டுமென்றே ஒருவரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.