குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்... அபிஷேக் பானர்ஜி

 
அபிஷேக் பானர்ஜி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

அசாமில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரண்டு நாள் அசாம் பயணத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து வாய் திறக்கவில்லை. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். பா.ஜ.க. தலைமையிலான அரசு செய்யும் அரசியலுக்கு இது ஒரு சான்று. 

“அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” – அமித் ஷா கவலை

அவர்கள் (பா.ஜ.க.) இந்த பிரச்சினையை வெற்று வாக்குறுதியாக பயன்படுத்துகிறார்கள். குடியுரிமை திருத்த மசோதா 2019ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஒரு மாதத்தில் அது நடைமுறைக்கு வந்து குடியுரிமை திருத்த சட்டமாக ஆனது. புதிய சட்டத்தின் விதிகளை வகுக்க 3 முதல் 4 மாதங்கள் ஆகும். ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஆறு நீட்டிப்புகளை மத்திய அரசு கோரியது. ஆனால் இன்னும் விதிகளை உருவாக்க முடியவில்லை. 

திரிணாமுல் காங்கிரஸ்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். இது கொடூரமான மசோதா. ரூ.1,600 கோடி செலவில் அசாமில் என்.ஆர்.சி. பட்டியலை அரசாங்கம் தயாரித்தது, 19 லட்சம் பேர் தவிர்க்கப்பட்ட, சிதைந்த பட்டியல் அது. சிலர் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாகவும், சிலர் முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வகுப்புவாதத்தின் கண்ணாடியை கழற்றினால், இந்தியா ஆபத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.