பீகாரில் தேஜஸ்வி யாதவ் கட்சிக்கு தாவிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ.க்கள்.. அசாதுதீன் ஓவைசி ஷாக்
பீகாரில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் நேற்று தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர். இது அசாதுதீன் ஓவைசிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
2020ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வாக்குகளை பிரித்ததால்தான் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டதாக கூறப்பட்டது. மேலும், அசாதுதீன் ஓவைசி கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என சிலர் விமர்சனம் செய்தனர்.
தற்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ.க்கள் அசாதுதீன் ஓவைசிக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மொத்தமுள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் நேற்று தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தனர். இருப்பினும், தற்போது பீகார் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அக்தருல் இமான் மட்டுமே தற்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியில் உள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்கள் கட்சியில் இணைந்துள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹாவை சந்தித்து தெரிவித்தார். இதனையடுத்து பீகார் சட்டப்பேரவையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 80ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சி என்ற அந்தஸ்தையும் ராஷ்டிரிய ஜனதா தளம் பெற்றுள்ளது.