அவுரங்கபாத் பெயரை மாற்றுவதால் மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி சுமை ஏற்படும்.. ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. இம்தியாஸ் ஜலீல்

 
ஏ.ஐ.எம்.ஐ.எம்.

அவுரங்கபாத் பெயரை மாற்றுவதால் மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி சுமை ஏற்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 29ம் தேதியன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் எனவும், உஸ்மனாபாத் நகரை தாராஷிவ் எனவும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை டி.பி. பாட்டீல் சர்வதேச விமான நிலையம் எனவும் பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே

அமைச்சரவை கூட்டம் நடந்த அதற்கு அடுத்த நாளில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. தற்போது மகாராஷ்டிராவில் உள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க.-சிவ சேனா அரசு, முந்தைய உத்தவ் தாக்கரே அரசின் பெயர் மாற்ற முடிவை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவுரங்கபாத் பெயரை மாற்றுவதால் மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி சுமை ஏற்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.

இம்தியாஸ் ஜலீல்

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவுரங்கபாத் பெயரை மாற்றுவதால் அரசுக்கு சுமார் ரூ.1,000 கோடி சுமை ஏற்படும். இது அரசு துறையின் ஆவணங்களை மாற்றுவதற்கு மட்டுமே. பொதுமக்கள் பல ஆயிரம் கோடி சுமையை கடக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.