அதிமுக சஸ்பென்ஸ்! இவர்தானா அது?
அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் அது தனது தலைமையின் கீழ் வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஆதரவாக இருக்கிறார்கள். இதை உணர்ந்துதான் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் தேர்வில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளரான சி.வி. சண்முகத்தை ஆதரிக்க , இன்னொரு ஆதரவாளரான ஜெயக்குமாரையும் ஆதரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் இடம் கோரிக்கை வைக்க, அதற்கு மறுத்த அவர் தனது ஆதரவாளர் தர்மரை தேர்ந்தெடுத்தார்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் ஆதரவு வழங்காமல், ஊராட்சி ஒன்றிய சேர்மனை மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்ததால், தன்னை நம்பி வந்தால் சாதாரண நபருக்கும் முக்கிய பொறுப்பை வழங்குவேன் என்று சொல்லும் விதமாக ஓபிஎஸ் அந்த செயலைச் செய்திருந்தாலும், இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் சீனியர்கள் எத்தனையோ பேர் எதிர்பார்த்திருக்க, அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பை கொடுக்காமல் தர்மருக்கு கொடுத்ததில் கட்சியின் சீனியர்களுக்கு பலமும் வருத்தம்.
இதே அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால் தனக்கு மாநிலங்களை எம்.பி சீட் கிடைத்திருக்கும். இரட்டை தலைமையின் கீழ் இருந்ததால்தான் ஓபிஎஸ் ஒரு சீட்டை பங்கு போட்டுக்கொண்டார்என்று நினைத்த ஜெயக்குமார், அதிமுக ஓற்றை தலைமையின் கீழ் வரவேண்டுமென்று வலியுறுத்த தொடங்கிவிட்டார்.
மாநிலங்களவை எம்பி தேர்தல் வேட்பாளர் தேர்வில் இரட்டை தலைமையின்கீழ் அதிமுக இருப்பதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு ஆதரவாளர் , பன்னீர் செல்வத்திற்கு ஒரு ஆதரவாளர் என்று போய்விட்டது . இதேபோல் அடுத்தடுத்து வரும் தேர்தலிலும் இதே நிலைமை நீடித்தால் கட்சியில் பெரும் சிக்கல் ஏற்படும் . அதற்குள் கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதை கட்சியின் சீனியர்கள் பலரும் நினைத்திருக்கிறார்கள்.
பொதுக்குழுவிலும் இதே நிலை நீடித்தால் நிச்சயம் அதிமுக ஒற்றைத்தலைமையின் கீழ் வருவது உறுதி என்கிறார்கள் அதிமுகவினர். இதனால்தான் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவை முன்னிட்டு இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலானோர் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வர வேண்டும். அது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் , ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள் என்கிறார். ஆனால் அந்த ஒற்றை தலைமைக்கு யார் தலைமையாக வருவார்கள் என்பது சஸ்பென்ஸ் என்கிறார் அவர் . ஆனால், அவருக்கு தெரியும் எடப்பாடி பழனிச்சாமியைத் தான் எல்லோரும் முன்னிறுத்துகிறார்கள் என்று.